மரணத்துக்கு ஏதுவான பாவம் / மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம்
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். 1 யோவான் 5: 16
யோவான் தேவனுடைய பிள்ளைகளுக்கு இங்கு இரண்டு விதமான பாவங்களை அதாவது மரணத்துக்கு ஏதுவான பாவம், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் குறித்து சொல்வதை அறிந்துகொள்ளலாம். இந்தக் காரியத்தை அறிந்துகொள்வதற்கு வேதத்தில் உள்ள பிற குறிப்புகளை சற்று சிந்திப்பது நலமாயிருக்கும்.
மரணத்துக்கு ஏதுவான பாவம்
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். 2 பேதுரு 2: 20, 21
ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எபிரேயர் 6: 4 - 6
மேற்சொல்லிய இரண்டு வார்த்தைகளும் அப்போஸ்தலனாகிய பேதுருவும், பவுலும் சொல்லியவைகள். மரணத்திற்கு வழிவகுக்கும் பாவம் சில சமயங்களில் மன்னிக்க முடியாத பாவம் என்று அழைக்கப்படுகிறது. தனது பழைய, பாவமான, வாழ்க்கை முறைக்குத் வேண்டுமென்றோ அல்லது விருப்பத்தோடு திரும்புகிறவர்களை குறிக்கிறது. அவர்கள் மனந்திரும்பவும் திரும்பவும் தேவனுக்கு கீழ்ப்படியவும் மறுக்கும்போது அது அவர்களுக்கு மன்னிக்க கூடாத பாவமாக அல்லது மரணத்திற்கு ஏதுவான பாவமாக மாறுகிறது. மரணத்திற்கு ஏதுவான பாவத்தை செய்யக் காரணமாக இருக்கிற கடின மனப்பான்மையிலிருந்து கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவாராக.
ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. மத்தேயு 12: 31, 32
இந்த வார்த்தைகள் தேவன் தமது சீஷர்களுக்கு சொன்னவைகள். பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாய் தூஷணமோ, வார்த்தைகளே சொல்லும்போது அவைகள் நமக்கு மன்னிக்கப்படுவதில்லை. உதாரணமாக நாமனைவரும் அறிந்த அனானியா சப்பீராள் சம்பவத்தை நினைவில் கொள்ளுவோம்.
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம்
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1: 9
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார். 1 யோவான் 2: 1,2
மரணத்திற்கு வழிவகுக்காத பாவம் என்பது நமது செயல்கள் மூலமாக செய்த பாவங்களை உணருகிற, மனந்திரும்ப விரும்புகிறதை குறிக்கிறது. நம்முடைய வாழ்வில் தேவனுடைய ஆவியைப் பெற்று மறுபடியும் பிறந்த அனுபவத்தைக் கொண்ட நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது அவசியமானதும் கர்த்தரை மகிழ்விப்பதுமான செயலாகும். அவ்வப்போது தடுமாறி பாவம் செய்யும்போது தேவனுடைய கிருபையை சார்ந்து மீண்டும் அந்த பாவத்தை செய்யாதிருக்க பிரயாசப்படுவோம். நம்முடைய பெலவீங்களில் நமக்கு உதவி செய்யவே தேவனுடைய ஆவி கொடுக்கப்பட்டிருக்கிறது. நமது மீறல்களை விரைவாக கர்த்தரிடம் ஒப்புக் கொண்டு, தாழ்மையுடன் மன்னிப்பு கேட்கிறவர்களாய் காணப்படுவோம்.
சுவிஷேசம் (நற்செய்தி) என்றால் என்ன?
நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து ………… I கொரிந்தியர் 15:3,4
வேதவாக்கியங்களின் படி இயேசு கிறிஸ்து ஜனங்களின் மேல் வைத்த அன்பினாலே, அவர்களின் பாவங்களுக்கு பதிலாக (பலியாக), முழு மனுக்குலத்தின் பாவத்திற்காகவும் சிலுவையில் தம்மை நொறுக்க ஒப்புக்கொடுத்து, மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, தாம் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு 1: 21
இயேசுவின் பிறப்பின் இரகசியமே தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்பதே.
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்போஸ்தலர் 1: 11
கர்த்தராகிய இரட்சகர் இந்த உலகிலே இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட படியே திரும்பவும் தமது ஜனங்களை அவரண்டைக்கு சேர்த்துக்கொள்ள வருவார் என்பதே கிறிஸ்த்துவத்தில் சொல்லப்பட்ட சுவிஷேசம் மற்றும் நற்செய்தி ஆகும்.
ஏன் சுவிசேஷம் (நற்செய்தி) சொல்ல வேண்டும்?
இயேசு மனிதனாய் உலகில் ஊழியம் செய்த நாட்களில் தமது சீஷர்களுக்கு அதாவது அவரை விசுவாசித்து பின்பற்றுபவர்களுக்கு கடைசியாக கொடுத்த கட்டளை தான் சுவிஷேம் அறிவிப்பது ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு 28: 19, 20 நமக்கு தேவன் கொடுத்த சுவிசேஷத்தை (நல்ல செய்தியை) தேவனுடைய ஈவை, அறியப்படாதவர்களுக்கு அறிவிப்பது நமது கடமையாகும்.
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. (I கொரிந்தியர் 9: 16) தேவனை அறியாதவர்களின் அழிவிற்கான இரத்தப்பழியை கர்த்தர் தமது பிள்ளைகளின் கையிலே கேட்பார் எனவே ஜனங்களை அழிவிலிருந்து காப்பதற்காக சுவிஷேசம் சொல்லவேண்டும்
நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன். துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய். (எசேக்கியேல் 33: 8, 9)
எழுதியவர்
Jenophene Abraham
கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.