ஸ்கட்டர் குடும்பம் - டாக்டர். ஜான் ஸ்கட்டர் (1793-1855) மற்றும் டாக்டர். ஐடா ஸ்கட்டர் (1870-1960)
மிஷனரி சகாப்தம் - ஸ்கட்டர் குடும்பம்
டாக்டர். ஜான் ஸ்கட்டர் (சீனியர்) உலகத்தின் பல மூலைகளுக்கும் கிறிச்த்துவின் அன்பை எடுத்து சென்றவராவர். இவரது மரபு வழியில் வந்த அடுத்த நான்கு தலைமுறையில் 42 மிஷனரிகள் எழும்பி அணைவரும் சேர்ந்து 1100 க்கும் அதிகமான வருடங்கள் இறைப்பணியும் மருத்துவப்பணியும் செய்து இயேசுவின் அன்பை உலகத்திற்கு காண்பித்துள்ளனர்.
டாக்டர்.ஜான் ஸ்கட்டரின் (சீனியர்) ஏழாவது மகனாகிய “ஜான் ஸ்கட்டர் II” –க்கு பிறந்தவர் தான் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் – ஐ நிறுவிய டாக்டர். ஐடா ஸ்கட்டர். தமிழ் மக்களுக்கு டாக்டர்.ஜான் ஸ்கட்டரின் குடும்பத்தினர் ஆற்றிய அருட்பணியால் திண்டிவனம், வேலூர், இராணிப்பேட்டை, குடியாத்தம் ஆகிய இடங்களில் அநேக மக்கள் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டனர். காலரா, பிளேக். மஞ்சள் காமாலை போன்ற உயரி கொல்லி நோயினால் மரணத்தை நோக்கி ஓடிகொண்டிருந்த தமிழ் மக்களுக்கு ஸ்கட்டர் குடும்பத்தினர் செய்த மருத்துவப்பணிகள் இன்றளவும் தமிழ்நாட்டின் வேலூரில் தொடர்ந்து வருகிறது.
டாக்டர்.ஜான் ஸ்கட்டர் (1793-1855)
டாக்டர் ஜான் ஸ்கட்டர் (1793-1855)
டாக்டர்.ஜான் ஸ்கட்டர் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ப்ரீஹோல்ட் (FREEHOLD) என்ற ஊரில் ஜோசப் (வக்கீல்) – மரியா ஸ்கட்டர் என்ற தம்பதியினருக்கு 1793-ம் வருடம் செப்டம்பர் 3 தேதி செல்வ மகனாகய் பிறந்தார். New York College of Physicians and Surgeons கல்லூரியில் 1813-ம் வருடம் தமது மருத்துவ படிப்பை முடித்து தனது மருத்துவ வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார். 1813-ம் வருடம் ஹாரியட் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அந்த நாட்களில் அதிகளவு மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் மருத்துவர்களுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது. அதுமட்டுமில்லாமல் ஜான் ஸ்கட்டரின் திறமையும் கனிவோடு நோயாளிகளை கவனிக்கும் திறமையும் அநேகரை கவர்ந்ததால் வருடத்திற்கு 2000$ சம்பாதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மருத்துவரானார். ஐந்து வருடங்கள் அமெரிக்காவிலேயே மருத்துவராக பணி செய்ததால் செல்வமும் புகழும் டாக்டர்.ஜான் ஸ்கட்டருக்கு குவிய தொடங்கியது. ஆயினும் கடவுள் பக்தி மிகுந்தவராய் Reformed Church க்கு சென்று கொண்டிருந்தார். அந்த நாட்களில் அநேகரை மனம் திரும்பதலுக்கு நேராய் நடத்தினார்.
1819-ம் வருடத்தில் ஒருநாள் நோயாளியை சந்திக்க ஒருவரின் வீட்டிற்கு அவர் சென்றிருந்த பொழுது, அங்கு வரவேற்ப்பறையிலிருந்த ஒரு துண்டு தாளின் (Pamphlet) செய்தியாகிய "அறுபது கோடி மக்களின் மனமாற்றத்திற்கு சபைகள் என்ன செய்ய வேண்டும்" என்பதை கண்டார். அதன்மூலம் இந்தியா மற்றும் சிலோனின் மக்களுக்கு தேவைப்பட்ட மருத்துவ பணியை குறித்து அறிந்தார். அந்த கணமே நமது அருமை இரட்சகர் இயேசுவின் குரலையும் கேட்டார்: அது என்னவெனில் “என் பிதா அனுப்பினதைப்போல நான் உன்னை அனுப்புகிறேன்”. அதற்க்கு ஜான் ஸ்கட்டர், “அனுப்பும் ஆண்டவரே நான் போகிறேன்’ என்றார். இதற்கு ஜான் ஸ்கட்டரின் தகப்பனார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். செல்வ மைந்தன் உலக பெருவாழ்வை நீத்துவிட்டு, வறுமையை உவந்தேற்றுகொண்டு, கடல் கடந்து கண் கானா நாட்டுக்கு சென்று, பசியால் வாடி வதக்கி, கொடிய வெயிலின் கோரப்பிடியில் நலிந்தும் மெலிந்தும் மிஷனரியாக பணியாற்றுவதா? கூடவே கூடாது என ஜான் ஸ்கட்டரின் கையை பிடித்து கெஞ்சி மன்றாடினார் தகப்பன். ஆனால் ஜான் ஸ்கட்டரோ தமது தப்பனின் கைகளை உதறிவிட்டு ஆண்டவர் இயேசுவின் கரங்களை பற்றிக்கொண்டார்.
தம் கனவரின் தீர்மானத்தை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தமது இரண்டு வயது பாலகனுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டார் ஜான் ஸ்கட்டரின் மனைவி ஹாரியட் ஸ்கட்டர். ஜுன் 8, 1819-ம் வருடம், 26 வயது நிரம்பிய ஜான் ஸ்கட்டர் தனது மனைவி ஹாரியட் ஸ்கட்டர் மற்றும் தனது இரண்டு வயது மகள் மரியாளுடன் இந்துஸ் கப்பலில் ஏறினார். 1819-ம் வருடம் கல்கத்தாவில் வந்து சேர்ந்தனர் ஸ்கட்டர் தம்பதியினர். ஆறுமாத கால நெடும் கடல் பயணத்தில் கப்பலில் பணி செய்தவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார் ஜான் ஸ்கட்டர். பின்னர் கல்கத்தாவில் மிஷனரியாக ஊழியம் செய்துகொண்டிருந்த வேதமொழிபெயர்ப்பாளரும் மிஷனரிகளின் தந்தை எனவும் அழைக்கப்பட்ட “வில்லியம் கேரி-யை” செராம்பூரில் சந்தித்தார். அதன் பின்னர் அவர் வாழ்வில் வேதனைகள் சூலத்தொடங்கியது. தனது இரண்டு வயது மகள் மரியா கேத்தரின் வயற்று போக்கினால் அக்டோபர் 25-ம் தேதி மரித்தாள். இந்த சூழ்நிலையில் ஜான் ஸ்கட்டர் இவ்வாறு எழுதினார், “கடினமான சோதனை தான் என்றாலும் முறுமுறுப்பதில்லை. இயற்கையான சோகங்கள் வர வேண்டும். ஒருவேளை நாங்கள் திரும்பி சென்றால் எனது பெற்றோர்கள் எம்மை மன்னித்தது ஏற்றுக்கொள்ளலாம். இல்லை. திருச்சபையின் தலையாகிய கிறிஸ்து என்னை அமெரிக்காவிலிருந்து அழைத்து இந்த மக்கள் மத்தியில் வாழ வைப்பதற்காக நன்றி சொல்கிறேன். அழிந்து போகும் ஆத்துமாவை ஆண்டவர் இயேசுவிடம் சேர்க்கும் பணியை தகுதியற்ற அடியவனிடம் இறைவன் தந்துள்ளார்” என்றார். பின்னர் அதே வருடம் டிசம்பர் மாதம் ஸ்கட்டர் தம்பதியினர் சிலோன் வந்து சேர்ந்தனர். யாழ்ப்பாணம் பகுதியில் மருத்துவப்பணி செய்ய மிஷன் மூலம் நியமிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் ஸ்கட்டர் தம்பதியினர், 1819-1836
சிலோனில் புத்தர்கள் அதிகமாக இருந்தாலும் யாழ்பானத்தில் அதிக அளவு இந்து மக்கள் காணப்பட்டனர். உற்சாகமாக மக்களுக்கு மருத்துவ பணியை துவங்கிய ஸ்கட்டர் தம்பதியினருக்கு மீண்டும் ஒரு சோதனை காத்திருந்தது. 1820-ம் வருடம் பிப்ரவரி மாதம் ஸ்கட்டர் தம்பதியினருக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே பிப்ரவரி 25 ல் மரித்துப்போனது. ஆனாலும் ஸ்கட்டர் தம்பதியினர் தங்களுடைய மிஷனரி அழைப்பில் உறுதியாய் நின்றனர்.
அதற்கு பின்னர் இத்தம்பதியினருக்கு எட்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். எட்டு ஆண்களில் ஒருவரான சாமுவேல் ஸ்கட்டர் இறையியல் காலூரியில் படிக்கும் பொழுது நீரில் மூழ்கி இறந்துவிட்டார். மற்ற ஏழு மகன்களும், இரண்டு மகள்களும் தங்களது படிப்பை அமெரிக்காவில் முடித்து பின்னர் தென்இந்தியாவில் மருத்துவ மிஷனரிகளாக இறைப்பணியாற்றினர்.
1820-ம் வருடம் யாழ்ப்பாணத்தில் உள்ள பண்டத்தரிப்பு என்னுமிடத்தில் மிஷன் ஸ்டேஷன், மருத்துவனை மற்றும் பள்ளியை நிறுவினார். பண்டத்தரிப்பு என்னுமிடத்தில் அவைகள் தங்குவதற்கு ஓலையால் வேயப்பட்ட வீடு கொடுக்கப்பட்டது. அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவர் ஜான் ஸ்கட்டர் என்பதை மறந்து கிறிஸ்துவிற்க்காக பாடுகளை சகித்து ஊழியத்தை அனுதினமுமும் செய்து வந்தார். ஜான் ஸ்கட்டர் தான் அமெரிக்காவில் இருந்து வெளிதேசத்திற்கு முதல் மருத்தவ மிஷனரியாக வந்தவர். அவரது கொள்ள்கை என்னவென்றால், மருந்துகள் மூலம் ஒருவரது உடலைக் காப்பாற்றி பின்னர் ஆத்துமாவை காக்க வல்ல இரட்சகரை அறிவிப்பது தான்”. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் காலரா, மலேரியா, பிளேக், மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் அதிகமாய் பரவின. அந்த நோய்களிலிருந்து அநேகரை காப்பாற்றி இரட்சகரை அறிவித்தனர் ஸ்கட்டர் தம்பதியினர். மருத்துவமனையும் பள்ளியும் மட்டுமின்றி திருச்சபைகளையும் நிறுவினார் ஜான் ஸ்கட்டர். தொடர்ந்து 19 வருடங்கள் யாழ்ப்பாணத்தில் மருத்துவ மிஷனரியாக பணியாற்றி இயேசுவின் நற்செய்தியை அநேக மாக்களுக்கு அறிவித்தனர்.
1821-ம் ஜான் ஸ்கட்டர் தமிழ் மொழியை நன்கு கற்று அநேகருக்கு தமிழில் நற்செய்தியை அறிவிக்க தொடங்கினார். அனுதினமும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும் கவனித்து வந்தார். அந்நாட்களில் அச்சு இயந்திரம் அதிகளவு இல்லாத காரணத்தினால் பனை ஓலையில் மைகொண்டு இயேசுவின் அன்பை எளிதி அநேக பகுதிகளுக்கு சென்று கொடுத்து வருவார். அனுதினமும் காலையில் குறையாது 60 நோயாளிகள் அவரது மருத்துவமனைக்கு வருவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்பு கைகளால் ஓலையில் எழுதிய சுவிஷேச நற்செதியை அநேக மக்களுக்கு கொடுப்பார். அவரது மருத்துவ மற்றும் ஊழியத்தின் மத்தியில் 23 பள்ளிகளை யாழ்பாணம் பகுதியில் நிறுவினார். அதுமட்டுமில்லாமல் 16 ஆண் குழந்தைகளையும் 3 பெண் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
இந்தியாவில் ஸ்கட்டர் தம்பதியினர்
1836-ம் வருடம் மெட்ராஸுக்கு இடம் மாற்றப்பட்ட ஜான் ஸ்கட்டர் தமது நண்பர் வின்ஸ்லோ உடன் இணைந்து பிரிண்டிங் பிரஸ் ஒன்றை நிறுவி சுவிஷேச துண்டு பிரதிகளை (Pamphlet) தமிழில் அச்சிட்டு வெளியிடும் ஊழியத்தை தொடங்கினார். தான் எப்படி ஒரு சிறிய துண்டுபிரதி மூலமாய் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றோமோ அதேபோல அநேக மக்களுக்கு துண்டு பிரதி மூலம் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டுமென விரும்பினார். துண்டு பிரதிகள் மூலம் சுவிசேஷம் அறிவிக்கும் முறையை ஆசியா கண்டத்திற்குள் அறிமுக படுத்தி அதன் மூலம் அநேக ஆத்துமாக்களை கிறிஸ்த்துவுக்குள் அழைத்து வந்தார். சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் தங்கி ஆறு வருடம் மருத்துவ ஊழியத்தொடு துண்டு பிரதி ஊழியத்தையும் செய்தார். இந்தியா முழுவதிலும் துண்டு சுவிஷேச துண்டு பிரதிகளை மக்களிடம் கொடுக்க வேண்டுமென்று சொல்லி அநேக மொழிகளில் அநேக தலைப்புகளில் சுவிஷேச பிரதியை அச்சிட்டார் ஜான் ஸ்கட்டர். மெட்ராஸில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் வாலஜாவிற்கு அடிக்கடி பயணம் செய்து ஊழியம் செய்து வந்தார். 11 மணி நேரம் வெயிலில் நின்று பிரசங்கம் செய்து துண்டு பிரதிகளை கொடுத்து ஊழியம் செய்ததால் டாக்டர். ஜான் ஸ்கட்டரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. 1842-ம் வருடம் உடல் சுகவீனம் காரணமாக அமெரிக்கா சென்று குணமடைந்த பின்பு 1846-ம் வருடம் மீண்டும் இந்தியா வந்து மதுரையில் தங்கி இரண்டு வருடம் மருத்துவ பணியோடு சுவிஷேச பணியையும் செய்தார். சபைகளில் நிலவி வந்த ஜாதி பார்க்கும் முறைக்கு எதிராக போரிட்டு கிறிஸ்த்துவின் சபையில் அணைவரும் சமம் என்ற கொள்கையை நிலை நாட்டினார் ஜான் ஸ்கட்டர்.
ஸ்கட்டர் தம்பதியினரின் இறுதி நாட்கள்
1849-ம் வருடம் மீண்டும் மெட்ராஸில் மருத்துவ பணியோடு ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார். அந்நாட்களில் ஹாரியட் ஸ்கட்டரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு 1849-ம் வருடம் நவம்பர் 29-ம் தேதி தமது 54-ம் வயதில் இறைவனிடம் சேர்ந்தார். மரிப்பத்தர்க்கு முன்னமாக ஹாரியட் அம்மையார் கண்களை துறந்து “மகிமையான பரலோகம், மகிமையான இரட்சிப்பு” என்று சொல்லி கண்களை மூடியுள்ளார். ஜான் ஸ்கட்டரை இது மிகவும் பாதித்தாலும் தமக்கு நியமிக்கப்பட்ட மருத்துவ பணியை செய்து, சுவிஷேச துண்டு பிரதிகளை மக்களிடம் கொடுத்து 1854-ம் வருடம் வரை இறைப்பணி செய்து வந்தார். ஒரு நாளைக்கு இரண்டு பிரசங்கள் செய்து வந்த ஜான் ஸ்கட்டர், மனைவி இறந்த பிறகு வேதனையின் மத்தியிலும் ஒரு நாளைக்கு மூன்று பிரசங்கள் வரை செய்து வந்தார். 1855-ம் வருடம் தென்அமெரிக்காவிற்கு மருத்துவ மிஷனரியாக சென்றார். உற்சாகமாய் ஊழியம் செய்த ஜான் ஸ்கட்டர், 1855-ம் வருடம் ஜனவரி மாதம் 13-ம் தேதி இரவு நித்திரையில் இறைவனடியில் சேர்ந்தார். அவரது உடல் மெட்ராஸுக்கு கொண்டுவரப்பட்டு தமது மனைவியின் கல்லறை அருகிலே புதைத்து பின்னர் ராணிபேட்டையில் அவர்களது உடல் கோதுமை மணியாய் விதைக்கப்பட்டது.
ஐடா ஸ்கட்டரின் குழந்தைப் பருவம்
டாக்டர் ஐடா ஸ்கட்டர் (1870-1960)
டாகடர். ஜான் ஸ்கட்டர் II, சோபியா ஸ்கட்டர் தம்பதியினருக்கு, 1870-ம் வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி, ஐந்தாவது குழந்தையாக இந்தியாவில் பிறந்தார் “ஐடா ஸ்கட்டர்”. இந்தியாவில் மிஷனரியாக மருத்துவபணி செய்த டாக்டர். ஜான் ஸ்கட்டர் (சீனியர்)-ன் ஏழாவது மகனான டாக்டர். ஜான் ஸ்கட்டர் II, திண்டிவனத்தில் மருத்துவ மிஷனரியாக ஊழியம் செய்து வந்தார். 1877 ஆம் ஆண்டில் இந்தியாவில் கோரப்பஞ்சம் தாண்டவமாடிற்று. பட்டினி சாவு மட்டும் 52 லட்சத்து ஐம்பதினாயிரம் என்று கண்ட்க்கிடப்பட்டது. ஜான் ஸ்கட்டர் தம்பதியினர் அந்நாட்களில் வேலூரில் மருத்துவ மிஷனரியாக பணிசெய்தனர். தங்களால் இயன்ற அளவு மக்களுக்கு ரொட்டி துண்டுகளளைக் கொடுத்து காப்ப்ற்றினர். அப்பொழுது ஐடா ஸ்கட்டருக்கு ஆறு வயது தான். ஆனாலும் அந்த சிறு வயதிலே, அவள் வயதில் இருந்த அநேக குழந்தைகளை காப்பாற்றினாள். ரொட்டியை கையில் கொடுத்தால் அதை வாங்கி வாயில் கூட போட முடியாதளவு அந்த குழந்தைல்கள் பெலனிழந்து காணப்பட்டார்கள். ஐடாவோ ரோடியை பொடியாக்கி அதை குழந்தைகளின் வாயிலே ஊட்டி அநேக குழந்தைகளுக்கு உயிர் கொடுத்தாள். அநேக முதியர்களும், சிறு குழந்தைகளும் உணவின்றி எலும்புகூடு போல காட்சியளித்தார்கள். அநேக மக்கள் வீதிகளிலே உணவின்றி மரித்து கிடந்தார்கள். இதையெல்லாம் பார்த்த ஐடா ஸ்கட்டருக்கு மிஷனரி ஊழியத்தின் மீது பயம் வந்தது. மிஷனரி என்றாலே தமது வாழக்கையில் அநேக பாடுகளை சந்திக்க நேரிடும் என்பதை அந்த அறிந்து கொண்டார் ஐடா ஸ்கட்டர்.
ஐடா ஸ்கட்டரின் பள்ளி வாழ்க்கை
Dwight L. Moody ஐடாவை தன்னுடைய Northfield Seminary –யில் படிக்குமாறு அழைத்தார். அதன்படி அமெரிக்காவிற்கு சென்ற ஐடா ஸ்கட்டர் அமெரிக்காவின் செழிப்பான வாழ்க்கையில் உலகை மறந்தார். பலவேறு குறும்புதனங்கள் செய்வதில் கெட்டிகாரியாகவும் திகழ்ந்தார். தன் வாழ்நாளில் ஒருபோதும் மிஷனரி ஆகப்போவது இல்லை என தீர்மானமும் எடுத்தார். 1877 ஆம் வருடம் இந்தியாவில் ஏற்ப்பட்ட கொடிய பஞ்சத்தின் தாக்கம் ஐடா-வை பயமுறுத்திக்கொண்டே இருந்தது. இந்தியாவில் நிலவிய வறுமை, பஞ்சம்,வியாதி அவளை விரக்திக்குள்ளாக்கியது. எப்பொழுதெல்லாம் இதை நினைக்கிறாறோ அப்பொழுதெல்லாம் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டு, “நான் அமரிக்காவில் தான் இருப்பேன்” என்று சொல்வார். மேலும் இறைத் தூதர் பணியில் அவளுக்கு நாட்டமில்லாமல் போனதற்கு, அவளுடைய குடும்ப உறுப்பினர் அனைவருமே இறைப் பணியாளர்கள் என்பது இன்னொரு காரணம். அப்பாவுடைய ஏழு சகோதரர் அனைவருமே இறைப் பணியாளர்கள்தான்! அதோடு அவளின் இளமை. பிடித்த ஒருவரை திருமணம் புரிந்து அமெரிக்காவில் சொகுசாக வாழ வேண்டும் என்ற கனவு!. இவ்வாறு ஐடா ஸ்கட்டரின் பள்ளி வாழ்க்கையும் இறைத் தூதர் (missionary) பயிற்சியும், 20 வயதில் நிறைவு பெற்றது. தந்தை ஜான் ஸ்கட்டரரின் மருத்துவப் பணியின்போது உதவி வந்த தாய் சோபியா ஸ்கட்டருக்கு உடல் நலம் குன்றிய காரணத்தால் ஐடா ஸ்கட்டர் உதவ வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. 1890-ல் ஐடா ஸ்கட்டர் இந்தியாவிற்கு வரவேண்டிய கட்டாயம் உருவானது. தனது தாயாரை மிகவும் நேசித்த படியால் இந்தியாவை நோக்கி பயணப்பட்டார்.
இந்தியாவில் மூன்று அழைப்புகள்
ஐடாவையும் அவளது சகோதிரன் ஹாரியும் அழைத்து செல்ல துறை முகம் வந்திருந்தார் டாக்டர். ஜான் ஸ்கட்டர். சிறுகுழந்தையாக பார்த்த ஐடாவை இருபது வயது பெரியவளாக வளர்ந்திருப்பதை பார்த்ததில் அந்த கண்ணீர் விட்டார் தந்தை ஜான் ஸ்கட்டர். பல ஆண்டுகள் பெற்றோரை பிரிந்த பிள்ளைகளின் கண்களில் சொல்லொன்னா வேதனையே வெளிப்பட்டது. “ஏன் மற்றவர்களை போல நீங்களும் அமெரிக்காவில் சந்தோசமாய் வாழ்வதை விட்டு, இப்படி பிள்ளைகளை பிரிந்து, வெயில் கொளுத்தும் தேசத்தில் கஷ்டப்படுகிறீர்கள்” என்று உள்ளத்தில் நினைத்தார் ஐடா ஸ்கட்டர். சென்னையிலிருந்து மாட்டு வண்டியில் திண்டிவனத்தில் உள்ள கூரைவேய்ந்த மிஷன் வீட்டுக்கு வந்தனர்.
பாமர மக்கள் இவளையும் ஒரு மருத்துவராக எண்ணினர். மருத்துவ சிகிச்சைக்காக மிஷன் விட்டுக்கு வரும் திண்டிவன மக்கள், ஐடா ஸ்கட்டரை “மிஸ்ஸியம்மா” என்று அழைத்தனர். எட்டு வருடம் தமிழ் நாட்டில் வாழ்ந்ததால் ஓரளவு தமிழ் பேச அறிந்திருந்தார் ஐடா ஸ்கட்டர். திண்டிவனம் என்றும் போல காரிருளில் மூழ்கியிருந்தது. அது இரவு நேரம். மின்சாரம் இல்லாத காலம். வருடம் 1870! அந்த மிஷன் பங்களாவில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் ஆங்கில நாவல் படித்துக் கொண்டிருந்தாள் ஐடா ஸ்கட்டர். ஆனால் அன்றைய இருண்ட இரவு அவளுடைய உள்ளத்தில் ஒரு உள்ளொளியை உண்டுபண்ணியதை இறைவனின் செயல் என்றுதான் கூறவேண்டும்! நாவலில் மூழ்கியிருந்தவளின் கவனத்தை கதவை வெளியில் யாரோ தட்டும் சத்தம் கலைத்தது. நள்ளிரவை நெருங்கும் நேரம். பெற்றோர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். எழுந்து சென்று கதவைத் திறந்தாள். சிமிழி விளக்கின் ஒளியில் ஒரு இஸ்லாமியர் தலையில் சமய குல்லா அணிந்தவாறு நிற்பது கண்டாள். அவரைப் பார்த்து அவள் திரு திருவென விழித்தாள். வந்தவர் பதற்றத்துடன் காணப்பட்டார்.
” மிஸ்ஸியம்மா. நீங்கள்தான் என் மகளைக் காப்பாற்றணும்! ” அவர் மன்றாடினார். ” உங்கள் மகளுக்கு என்ன? ” எனும் அர்த்தம்பட தமிழில் கேட்டாள் ஐடா ஸ்கட்டர். ” தலைப் பிரசவம்! வலியால் துடிக்கிறாள்! உடனே வாருங்கள் அம்மா ” அவர் கெஞ்சினார். ஐடாவோ, ” ஐ. ஆம் சாரி. நான் டாக்டர் இல்லே. பிரசவம் பாக்க எனக்கு தெரியலே, இருங்கள். அப்பாவை எழுப்புறேன். அவர் உடன் வருவார். ” என்றவாறு மாடி அறைக்குச் செல்ல திரும்பினாள். அந்த மனிதனோ, ” வேண்டாம் மிஸ்ஸி. அவரை எழுப்பவேண்டாம். ” என்று உரக்க கூறி தடுத்தார். ஐடாவோ ” ஏன் வேண்டாம்? உங்களுடைய மகள்? ” என்றாள். ஆனால் அந்த மனிதனோ, ” வேண்டாம் அம்மா வேண்டாம்! ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்களின் வேதத்தில் இடம் இல்லை. அதைவிட அவள் செத்தாலும் பரவாயில்லை. நான் வருகிறேன் தாயே! ” கைகள் கூப்பி விடை பெற்று இருளில் மறைந்துபோனார். அவள் செய்வதறியாது வியந்து நின்றாள்.
கதவைத் தாழிட்டுவிட்டு நாவலைக் கையில் எடுத்தாள். விட்ட இடத்தில் தொடர முயன்றாள். ஆனால் முடியவில்லை. மனதில் ஒரு நெருடல். அதிக நேரம் ஆகவில்லை. மீண்டும் கதவு தட்டப்பட்டது. ஒருவேளை அவர்தான் மனம் மாறி மீண்டும் வந்துள்ளாரோ என்ற எண்ணத்தில் கதவைத் திறந்து பார்த்தாள். அது வேறொருவர். நடுத்தர வயதுடையவர். நெற்றியில் பட்டை தீட்டியிருந்தது. அவ்ர் ஒரு இந்து. வணக்கம் கூறிவிட்டு அவர் சொன்னது அவளை வியப்பில் ஆழ்த்தியது. ”மிஸ்ஸியம்மா. என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள். உடன் என்னோடு வாருங்கள் அம்மா. அந்த இரு உயிரையும் காப்பாற்றுங்கள் தாயே! ” அவரும் கெஞ்சினார். மீண்டும் அதே பதிலைத்தான் அவள் கூறினாள் ஐடா. தந்தையை அழைக்கவா என்று கேட்டாள். ஆனால் அந்த மனிதனோ, ”வேண்டாம் தாயே! எங்கள் ஹிந்து சாஸ்த்திரத்தில் அதற்கு இடமில்லை. என் மனைவி செத்தாலும் சாகலாமே ஒரு ஆண் அவளுக்கு பிரசவம் பார்க்க முடியாது தாயே. ” அவரும் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
அவர் சென்றபின்பு அவள் அமைதி இழந்து போனாள். நாவலை மூடிவிட்டு படுக்கச் சென்றாள். உறக்கம் வரவில்லை. அப்போது மீண்டும் கதவு தட்டப்படும் சதம் கேட்டு குதித்தெழுந்தாள். கதவைத் திறந்து பார்த்தபோது வேறொரு நபர்! அவரும் ஒரு இந்துதான். ”மனைவிக்கு பிரசவ வலியா? ” என்று ஐடாவே கேட்டாள். ”ஆமாம் தாயே. அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது? உடனே வந்து என் மனைவியைக் காப்பாற்றுங்கள் மிஸ்ஸி. ” அவரின் கெஞ்சல். ஐடாவோ, “” அப்பாவை எழுப்பவா? ” என்று வெறுப்போடு கேட்டாள். அந்த மனிதனோ, “ அப்பாவா? வேண்டாம் தாயே. அது எங்கள் சம்பிரதாயத்தில் இல்லை தாயே. நீங்கள்தான் வரணும். ” அவர் உறுதியாகக் கூறினார். ஐடாவோ ”நான் டாக்டர் இல்லையே? அப்பாதான் வர முடியும் ” என்று கூறினாள். ஆனால் அந்த மனிதனோ, “ஒரு ஆண் பிரசவம் பார்ப்பதை விட என் மனைவி சாகலாம். ” என்றவாறே வந்த வழியே திரும்பினார். அதன்பின்பு அவளின் தூக்கம் பறந்தோடியது. இது இந்திய நாடு. இங்குள்ள கலாச்சாரமே வேறு. பெண்கள்தான் பிரசவம் பார்க்கவேண்டும் என்பதில் நம்பிக்கைக்கொண்ட மக்கள் வாழும் நாடு. இதற்கு என்னதான் தீர்வு? பெண் டாக்டர்களே இந்தியாவில் இல்லாத காலமாயிற்றே? தீவிரமாக யோசித்தாள் ஐடா என்ற அந்த இருபது வயதுடைய அமெரிக்க இள நங்கை!
மறு நாள் மாலையில் பங்களா தோட்டத்தில் ஐடா அமர்ந்து நாவல் படித்துக் கொண்டிருந்த போது வீதியில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அந்த மூவரும் பிரசவ சிக்கலில் இரவில் இறந்துபோன பதின்ம வயது பெண்மணிகள் என்பதைத் தெரிந்து கொண்டபின் மனம் வெதும்பினாள். இரவில் தோன்றிய உள்ளொளி அப்போது முழு வடிவம் பெற்றது!. அப்போதே தனது கனவான அமெரிக்காவின் சொகுசு வாழ்க்கையை தியாகம் செய்து விட்டாள் ஐடா! இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள் என்பதை அன்றே உணர்ந்து கொண்டாள்.அவர்களுக்காக தன்னையே அப்போது அர்ப்பணம் செய்து கொண்டாள். அதை கடவுளின் அழைப்பாகவும் நம்பினாள். அவள் திருமணம் பற்றிய எண்ணத்தையும் அன்றே கைவிட்டாள்.
1899 ஆம் வருடம் நியூ யார்க் நகரில் கார்நெல் பல்கலைக்கழகமருத்துவக் கல்லூரியில் (Cornell Universty Medical College) சேர்ந்தாள். அதிலும் ஒரு சிறப்பு. பெண்கள் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் வகுப்பு அது!. 1899 ஆம் ஆண்டில் அவர் தேர்ச்சியுற்று மருத்துவரானார். உடன் தமிழ் நாடு திரும்பி மருத்துவப் பணியை பிணியாளிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு செய்யவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார்.பலரிடம் தனது திட்டத்தைக் கூறினார். மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர் ஷெள் (Schell) என்பவர் தமிழ் நாட்டு பெண்களின் நலனுக்காக 10,000 அமெரிக்க டாலர்களை அவரின் மனைவியின் நினைவாக ஐடாவிடம் வழங்கினார். (அப்போது அதன் மதிப்பு மிகவும் அதிகமாகும்). அவர் தமிழ் நாடு திரும்பியபோது அவரின் தந்தை வேலூரில் மருத்துவப் பணியில் ஈடு பட்டிருந்தார். அவர் குடியிருந்த மிஷன் பங்களாவில் இரண்டு வருடங்கள் டாக்டர் ஐடாவும் 2000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். 1900 ஆம் ஆண்டில் அவரின் தந்தை ஜான் ஸ்கட்டர் மரணமுற்றார்.
ஐடா ஸ்கட்டரின் சாதனைகள்
மருத்துவப் பணியின் முழுப் பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்திருந்த நன்கொடையைப் பயன்படுத்தி 1902 ஆம் வருடம் ஒரு சிறு மருத்துவமனையை வேலூரில் அமைத்து அதற்கு ஷெல் மருத்துவமனை (Schell Hospital) என்று பெயரிட்டார். சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக தரப்பட்டன.(தற்போது இது Mary Taber Schell Hospital) என்று கண் மருத்துவமனையாக பெரிய அளவில் இயங்கி வருகின்றது). சுற்று வட்டார மக்கள் அதிக அளவில் அங்கு வந்து பயன் பெற்றனர். வருடத்தில் 40,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். அப்போது தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட ப்ளேக் (plague), காலரா, தொழுநோய் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடினார். தமிழ் நாட்டு பெண்களின் நல்வாழ்வுக்காக தான் ஒருவர் மட்டும் முயற்சியை மேற்கொள்வது இயலாத காரியம் என்பதை அவர் உணர்ந்தார். பெண்களுக்கான தாதியர் பயிற்சிப் பள்ளி நிறுவ எண்ணினார். அப்போது ஆசியாவிலேயே இது கேள்விப் படாத ஒன்றாகும். சென்னைப் பல்கலைக்கழக சம்மதத்துடன் இந்தியாவிலேயே முதல் தாதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவினார். 1909 ஆண்டில் அவர் ஆரம்பித்த வீதியோர கிளினிக் (roadside clinic) திட்டம் கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர கிராமம் கிராமமாகச் சென்று மரத்தடியிலும், குளத்தங்கரையிலும் அமர்ந்து ஏழை எளியோருக்கு மருத்துவச் சேவை புரிந்தார்.
ஆனால் அவருக்கு அப்போதும் திருப்தி உண்டாகவில்லை. தானும் தன்னால் உருவாக்கப்பட்ட தாதியராலும் பெண்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை வழங்குவது இயலாத காரியம் என்பதை உணர்ந்தார். பெண் மருத்துவர்களை உருவாக்குவதே அதற்கு ஒரே வழி என்பதை உணர்ந்தார். இந்த விபரீத எண்ணத்தைக் கேட்டவர்கள் இது நடக்கவே நடக்காது, அவரிடம் மூன்று மாணவிகள் வந்தாலே பெரிய ஆச்சரியம் என்று கேலி பேசினர். அப்போதிருந்த சமுதாய அமைப்பு அப்படி! பெண் கல்வியே இல்லாத காலம் அது! அந்த நிலையில் பெண்கள் மருத்துவம் பயில்வதா?. அரசு அனுமதியுடன் சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1918 ஆம் வருடம் பெண் மருத்துவர்களுக்கான கல்லூரி நிறுவப்பட்டது. அதில் சேர 151 பெண்கள் மனு செய்திருந்தனர். அவர்களில் 17 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வகுப்பில் சேர்க்கப்பட்டனர். இதுவே கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் ஆர்ம்பம். 1928 ஆம் வருடத்தில் வேலூர் டவுனுக்குள் பெரிய மருத்துவமனை உருவாக்கப்பட்டது. அதுதான் இன்றைய சி.எம்.சி. மருத்துவமனை. 1928 ஆம் வருடத்தில் பாகாயத்தில் மலைகள் சூழ்ந்த அழகிய பள்ளத்தாக்கில் பரவலான நிலப்பரப்பில் மருத்துவக் கல்லூரியின் வளாகம் அமைக்கப்பட்டது. அப்போது நாட்டின் தந்தை மகாத்மா காந்தி அவர்களும் கல்லூரியையும் மருத்துவமனையையும் விஜயம் செய்து சிறப்பித்தார்! இன்று கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரியாக விளங்குவதை நாடறியும்!
ஒரு தனிப்பட்ட பெண்மணி இவ்வளவு பெரிய சாதனைப் புரிய நிறைய பொருளாதாரம் தேவை. இவரின் மருத்துவப் பணியை இறைப்பணியாகவே ஏற்று 40 கிறிஸ்துவ சபைகள் ஓரளவு உதவின. ஆனால் அது போதாததால் நன்கொடைகள் திரட்டும் நோக்கில் 1941 ஆம் வருடம் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். தேவையான நிதி திரட்ட அவர் அமெரிக்காவின் அனைத்து பகுதிகளுக்கும் (மாநிலங்களுக்கும்) பிரயாணம் செய்தார்.அங்குள்ள திருச்சபைகள் அவரின் நற்பணிக்கு ஆதரவு நல்கியதோடு ஆண்டுதோறும் பொருள் உதவிகள் செய்யவும் ஆர்வம் காட்டின.பொதுமக்களும் அவருடைய புனிதப் பணியைப் பாராட்டி உதவினர். 2 மில்லியன் அமெரிக்கப் பெண்மணிகளிடம் ஆளுக்கு ஒரு டாலர் என்று 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டினார்! அதுபோன்று பல மில்லியன் டாலர்களுடன் வேலூர் திரும்பி, மருத்துவமனையையும் மருத்துவக் கல்லூரியையும் நவீனப் படுத்தினார். 1945 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் ஆண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இன்று அனைத்து வசதிகளுடனும், நவீன சிறப்புப் பிரிவுகளுடனும், 2000 படுக்கைகள் கொண்டு, ஆசியாவின் மிகப் பெரிய மருத்துவமனையாகவும், உலகின் மிகப் பெரிய மிஷன் மருத்துவமனையாக விளங்குகிறது! ஐடாவின் பெயர் உலகெங்கும் பரவியது. 1952 ஆம் வருடம் உலகின் சிறந்த 5 டாக்டர்களில் ஒருவராக டாக்டர் ஐடா ஸோஃபியா ஸ்கடர் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் ஐடா ஸ்கடர் வேலூர் நகர மக்களாலும், வட ஆற்காடு மக்களாலும் பெரிதும் போற்றப்பட்டார். அவரை பாசத்துடன் ஐடா அத்தை (aunt Ida) என்றே அழைத்தனர். இந்திய நாட்டின் பெண்களின் நல்வாழ்வுக்காக தமது வாழ் நாளை அர்ப்பணித்த தியாகச் செம்மல் அவர்.
தாதியர் கல்வியையும், பெண்களுக்கான மருத்துவக் கல்வியையும் இந்தியாவில் அறிமுகப் படுத்திய முன்னோடி அவர். அவர் தமது முதிர் வயதில் கொடைக்கானல் மிஷன் பங்களாவில் ஓய்வு பெற்றார். தமது 85 வது வயதில் ஒரு நாள் வழக்கம்போல் தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு தபாலில் ” டாக்டர் ஐடா, இந்தியா. ” என்று மட்டும் முகவரி எழுதப்பட்டிருந்தது. நாடு தழுவிய நிலையில் அவர் அறியப்பட்டிருந்தார். இந்தியப் பெண்களுக்காக அவர் செய்த மாபெரும் தியாகத்தையும் சேவையையும் பாராட்டும் வகையில் அவருடைய் நூற்றாண்டு தினமான ஆகஸ்ட் 12, 2000 நாளன்று அவரின் படமும் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் பொறிக்கப்பட்ட சிறப்பு தபால் தலை வெளியிட்டு பெருமை சேர்த்தது இந்திய அரசு!
1960 ஆம் வருடம் மே மாதம் 24 ஆம் நாள் அதிகாலையில் வழக்கம்போல் எழுந்தார். அவருக்கு வயது 90. வழக்கத்திற்கு மாறாக தலை சுற்றுவதாகக் கூறினார். அவருக்கு உதவும் தாதி, ” காப்பி குடியுங்கள் அம்மா தலை சுற்றல் நின்றுவிடும் ” என்றாள்.அவர், ” வேண்டாம் ” என்று பதிலளித்தார். ஐந்து நிமிடங்களில் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார் மிஷனரி ஐடா ஸ்கட்டர்.
எழுதியவர்
Jenophene Abraham
கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.