சத்திய ஆவி
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப் பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். யோவான் 16: 13
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடு கூட எப்போதும் இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை தந்தருளி இருக்கிறார். ஆனால் உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார். கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன். தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்று கர்த்தரை நோக்கி ஜெபித்தான். தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.
யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்று போராடி ஜெபித்தான். சத்திய ஆவியாகிய கர்த்தர் அவனை போதித்து நடக்க வேண்டிய அனுகூலங்களை ஏற்படுத்தி, அவன் சகோதரன் கண்களிலும் தயவு கிடைக்கச் செய்தார்.
எழுதியவர்
Jenophene Abraham
கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.