காத்திருக்கிறவர்களை இரட்சிப்பார்
ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது. தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். நீதிமொழிகள் 20: 21,22
பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். நமக்கு தீமை இழைத்தவர்களுக்கு பதிலாக தீமை செய்யாதிருப்போம் ஏனெனில் சரிகட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார். நாம் அவருக்கு காத்திருக்கும்போது அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி நம்மை இரட்சிப்பார்.
யோசேப்பு தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள். யாக்கோபின் குமாரர், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு: ஒருவேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிகட்டுவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி, உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார். ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான். பின்பு, அவனுடைய சகோதரரும் போய், அவனுக்கு முன்பாகத் தாழ விழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள். யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா; நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். கர்த்தரோ அதை நன்மையாக முடியப்பண்ணினார் என்றான்.
எழுதியவர்
Jenophene Abraham
கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.